மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவிகிதம் அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
7ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அகவிலைப்படி உயர்வு நடப்பாண்டின் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களும் பயன்பெறுவர். வழக்கமாக, ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மாற்றியமைக்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால், 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் வாங்கும் ஒரு மத்திய அரசு ஊழியருக்கு, இனி அவரது சம்பளத்தில் கூடுதலாக 540 ரூபாய் கிடைக்கும். இதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.