மகாராஷ்டிராவில் முதல்வராக பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசிவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார். இதனிடையே என்சிபியின் சட்மன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்படுவதாவும் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆளுநரின் முடிவு ஒருதலைபட்சமானது எனவும் அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது எனவும் சிவசேனா விமர்சனம் செய்திருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பட்னாவிசை பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசிவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இன்று இரவே அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.