அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, SNORE KILLING எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கான உடையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவை உலகளவில் கவனம் பெற்றன. மேலும் அவை மாலத்தீவுகளுக்கு மாற்றாக, சிறந்த சுற்றுலாத்தலமாக லட்சத்தீவுகளை பரிந்துரைப்பது போல் அமைந்தன.
இதையடுத்து மாலத்தீவுகளை சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் பிரதமர் மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பிரதமர் மோடியை கோமாளி என அமைச்சர் ஷியூனா விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்த மூன்று அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோரை மாலத்தீவுகள் அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து மாலத்தீவுகள் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டு இருப்பது அரசின் கவனத்துக்கு வந்திருகிறது. இந்த கருத்துகள் தனிப்பட்டவை. அவை மாலத்தீவுகள் அரசாங்கத்தின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் பலர் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா - மாலத்தீவுகள் இடையேயான விமான பயணத்துக்கான முன்பதிவுகளை, Ease My trip நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. Boycott maldives என்ற ஹேஷ்டேக்கும் டிரென்டாகி வருகிறது.
மேலும் மாலத்தீவு அமைச்சர்களுக்கு இந்திய பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர், லட்சத்தீவு மற்றும் சிந்துதுர்க் போன்ற இந்திய தீவுகளை அமைச்சர் மஹ்சூம் மஜித் பார்வையிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துகளை கூறியுள்ளதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தன் பதிவில் அக்ஷய் குமார், ‘ஏன் நாங்கள் வெறுப்பை சகித்துக்கொள்ள வேண்டும்’ என காட்டமாக தெரிவித்துள்ளார்.