மகாராஷ்டிராவில் காரில் சென்று கொண்டிருந்த மூவரை, நூறு பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கண்டிவாலி பகுதியை சேர்ந்த மூன்று பேர் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கடந்த வியாழக்கிழமை அன்று குஜராத் மாநிலம் சூரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார் மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் கட்சின்சாலே என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது.
காரில் இருந்து ஓட்டுநர் உள்பட மூவரையும் வெளியே இழுத்த அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அங்கு காவல்துறையினர் வந்தபோதும், அவர்களையும் பொருட்படுத்தாத கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. அதில், மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். திருட வந்தவர்கள் என்று நினைத்து தாக்குதல் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 9 சிறுவர்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 101 பேர் வரை காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 9 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிக்னே மஹராஜ் என்ற முதியவர், சுஷில்கிரி மஹராஜ், நிலேஷ் டெல்கேட் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.