3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடித்துவிடும் பாஜக அரசு 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க தவறவிட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர் ஹரூன் யூசூப் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதுமே அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில் இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு காரணம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர் ஹரூன் யூசூப் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''3 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு சென்றால் எளிதாக கண்டுபிடித்துவிடும் மோடி அரசு, 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க தவறவிட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு பாஜக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஹரூன் யூசூப் கருத்துக்கு பதில் அளித்துள்ள டெல்லி பாஜகவின் துணை தலைவர் ராஜிவ் பாபர், ''காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை முகத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தாக்குதல் நடந்தவுடன் இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து விசாரணையை துரிதப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால் சில நாட்களிலேயே காங்கிரஸ் இரட்டை முகத்தை காட்டத்தொடங்கியுள்ளது. தேவையற்ற கருத்துகளை பகிர்ந்து அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை காங்கிரஸ் பார்க்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய காஷ்மீர் தாக்குதலை அரசியல் ரீதியாக அணுகி தேவையற்ற சாயத்தை பூச காங்கிரஸ் முயற்சிப்பாதாக டெல்லி பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தனது ட்வீட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹரூன் யூசூப், நான் சொன்னது உண்மைதான். அதை மறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சரியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த தாக்குதல் எப்படி நடக்கிறது என்பது தான் தமக்கு புரியவில்லை என்று கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.