தலைநகர் டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் வடமாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில் பாஜக ஆட்சியில் உள்ளது. முதல்வராக நயாப் சிங் சைனி உள்ளார். இந்த நிலையில், பாஜக அரசுக்கு ஆதரவளித்திருந்த 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவைத் திரும்பப் பெற முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் முன்னிலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சோம்பீர் சங்வான், ரந்தீர் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜக அரசுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஹரியானா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், அம்மாநிலக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தள் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றிருந்தது. இதர இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர். இதையடுத்து, பாஜகவும், ஜனநாயக் ஜனதா கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தன.
அதாவது, 90 சட்டசபைத் தொகுதிகள் உள்ள ஹரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜகவும் ஜனநாயக் ஜனதா கட்சி இணைந்து ஆட்சி அமைத்தன. மனோஹர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். மக்களவை தொகுதி பங்கீடு மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணி முறிந்ததாகக் கூறப்படுகிறது.
ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதை அடுத்து, முதல்வராக இருந்த மனோஹர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். அவருக்கு 5 சுயேட்சைகள் மற்றும் ஹரியானா லோக்ஹித் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த நிலையில் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றிருப்பதால், ஏற்கெனவே ஜனநாயக் ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகியிருப்பதாலும் அங்கு ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஹரியானாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளிலும் 6வது கட்டமாக மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.