ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் நேற்று (11.4.2023) ரம்ஜான் விடுமுறை தினத்தின் போதும் தனியார் பள்ளியொன்று இயங்கியுள்ளது. இதற்காக 40 மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் கிட்டத்தட்ட 20 பள்ளி குழந்தைகள் காயமடைந்த நிலையில், 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தின் பின்னணியில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் தர்மேந்தர் மது அருந்தியிருந்ததாக கூறப்பட்டது. மேலும் ரம்ஜான் விடுமுறையின் போது விதிகளை மீறி பள்ளி இயக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் பல்வேறு தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்படி நேற்று காலை 8.30 மணி அளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தினை நேரில் கண்ட ஒருவரின் கூற்றுப்படி, கிராம மக்கள் சிலர் ஓட்டுநர் தர்மேந்தர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முன்பே அறிந்துள்ளனர். குழந்தைகள் செல்லும் வாகனம் என்பதால், அவரை பின்தொடர்ந்து பேருந்தை வழிமறித்து சாவியை பிடுங்கியுள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறுயுள்ளனர். அதற்கு நிர்வாகம், ‘விரைவில் வேறு ஒரு ஓட்டுநரை மாற்றம் செய்கிறோம். இப்பொழுது சாவியை ஓட்டுநரிடத்தில் கொடுத்துவிடுங்கள்’ என கூறியதாக தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி மக்களும் சாவியை கொடுத்துள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கோர விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
முன்னதாக கிராம மக்கள் மட்டுமன்றி, பேருந்தில் பயணித்த சில குழந்தைகளின் பெற்றோர்களும் இதுகுறித்து ஓட்டுநர் தர்மேந்தருக்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது. மேலும் பேருந்தின் உள்ளே பயணித்த குழந்தைகளும் “பேருந்தை அதிவேகமாக ஓட்டவேண்டாம். பயமாக இருக்கிறது. மெதுவாக ஓட்டுங்கள்” என்று தர்மேந்தரிடம் கூறியுள்ளனர். இருந்தபோதிலும் அவர் வாகனத்தினை மது அருந்திவிட்டு அலட்சியமாக ஓட்டியுள்ளார். அந்த அலட்சியத்தின் விலை, 6 பிஞ்சுகளின் உயிராகியுள்ளது.
மருத்துவ பரிசோதனையிலும் ஓட்டுநர் தர்மேந்தர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த தர்மேந்தர், மது அருந்திவிட்டு பள்ளி வாகனத்தை இயக்கியது இதற்கு முன்பும் பலமுறை நடந்திருப்பதாக தெரிகிறது. பள்ளி நிர்வாகமேகூட அவரை பலமுறை எச்சரித்திருக்கிறது. ஆனால் ஒருமுறைகூட நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர் விசாரணையில் இப்படி பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலமான நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை தினத்தில் பள்ளி இயக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு அரசிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நான்கு பேர் கொண்ட குழு அமைத்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பள்ளியின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய மாவட்ட கல்வி அதிகாரி மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதில் இன்னொரு சோகம் என்னவெனில், சம்பந்தப்பட்ட பள்ளி பேருந்தின் சான்றிதழ் 2018 இல் காலாவகியுள்ளது. பேருந்தில் குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லை என்பதும் இதன்மூலம் தெரிய வந்துள்ளன. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு மற்றொரு பள்ளி நிர்வாகியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை ஓட்டுநர் தர்மேந்தர், தலைமையாசிரியர் தீப்தி, நிர்வாகி ஹௌசைர் சிங் என மூவர் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.