அமெரிக்காவில் தெற்கு கரோலினாவின் கிரின்வில்லே கவுண்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விலகிச் சென்றது. அங்கிருந்து 20 அடி உயரத்திற்கு மேலே பறந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதி நொறுங்கியது. இச்சம்பவத்தில் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதா பென் படேல் மற்றும் மணிஷா பென் படேல் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து காவல் தறை விசாரணையில், ”அவர்கள் சென்ற காரின் வேகம் இயல்பைவிட அதிகரித்ததே விபத்துக்குக் காரணம்” எனத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் அருகே நேருக்குநேர் கார்கள் மோதிய விபத்தில், தெலங்கானாவைச் சேர்ந்த நிவேஷ் முக்கா மற்றும் கௌதம் பார்சி ஆகியோர் உயிரிழந்திருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.