செய்தியாளர் - ஜெகன்நாத்
கன்னடத் திரைப்பட நடிகரான யாஷ் ராக்கிங் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது பிறந்த நாள் இன்று. இதையடுத்து பல இடங்களிலுள்ள அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படி கர்நாடக மாநிலத்தில் அவருடைய ரசிகர்கள் பலர், யாஷூக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பேனர்கள், பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைத்து வருகின்றனர்.
இதில் கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் தாலுகாவில் உள்ள சரங்கி கிராமத்தில், நடிகர் யாஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இளைஞர்கள் 8 பேர் சேர்ந்து சுமார் 25 அடி உயரம் உள்ள கட் அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது 7 இளைஞர்கள் கட் அவுட் எடுத்து சென்றனர், ஒருவர் இதை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கட் அவுட்டை நிற்க வைக்கும் போது எதிர்பாராத விதமாக மேலே இருந்த மின்சார கம்பியில் அது உரசியது.
இதன்காரணமாக கட் அவுட் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் கட் அவுட் வைத்திருந்த இளைஞர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அதில், சம்பவ இடத்திலேயே ஹனுமந்த (21), முரளி (20), நவீன் (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த கிராம மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த லக்ஷ்மேஷ்வர் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷிர்ஹட்டி எம்.எல்.ஏ சந்துரு லாமணி சம்பவ இடத்திற்கு சென்று இறந்த இளைஞர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள் உலோகத்தால் ஆன சட்டங்களை கொண்ட பேனர்களை வைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். நடிகர் யாஷ், இறந்த இளைஞர்களின் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
கட் அவுட் வைக்க சென்ற மூன்று இளைஞர்கள் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.