சண்டிகரில் இருந்து அசாம் மாநிலம் தீப்ருகருக்கு நேற்று விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அது உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மற்றும் ஜிலாஹி இடையே சென்ற போது ரயிலின் 5 குளிர்சாதன பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 33 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப் படை வீரர்கள், காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் தடம்புரள்வதற்கு முன்பாக வெடிச்சத்தத்தை கேட்டதாக லோகோ பைலட் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பலத்த காயமடைந்தவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.