குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது.
கோவா சட்டமன்றத் தேர்தலின் போது, ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்த நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையில் நடைபெற்றது.
இது தொடர்பாக, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கோவா பிரமோத் சாவந்த், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, புதிய நிதியாண்டில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, சுயேட்சைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.