ராஜஸ்தானில் பெய்துவரும் தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 3 சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் சவமதோபூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பப்பு லால் என்பவர் தனது உறவுக்காரர் மற்றும் மூன்று மகன்களுடன் காரில் சென்றிருக்கிறார். அவர் ஒரு பெரிய வடிகாலை கடக்க முயற்சித்தப்போது வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் கார் கட்டுப்பாட்டை மீறி நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
நீரில் மூழ்கிய பப்பு லால், அவருடைய மூத்த மகன் ராம்ஜிலால் மற்றும் உறவுக்காரரும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். ஆனால் இளைய மகன்களான மான் சிங்(13) மற்றும் ரௌனாக்(9) இரண்டு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த புதரில் சிக்கி இறந்தனர். அவர்களுடைய உடலை இன்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல், இன்று ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்திலுள்ள சிராஸ் கிராமத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கீதா தேவி(42) என்ற பெண்ணின் உடலை குடும்பத்தார் எடுத்துச் சென்றிருக்கின்றனர். வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்த இடத்தில் சிக்கிய ஆம்புலன்ஸிலிருந்த அந்தப் பெண்ணின் 12 வயது மகன் மற்றும் கணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 12 வயது சிறுவன் இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். 45 வயதான அந்தப் பெண்ணின் கணவர் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.