பீகாரில் கொரோனா பாதித்த நபர்களின் பெயர்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 56 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், மேலும்2300-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்களை மாநில மத்திய அரசுகள் வெளியிடுவதில்லை. அவ்வாறு வெளியிட்டால் சமூகத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் இதனை அரசு தவிர்த்து வருகிறது. மேலும் நோயுற்றவர்களின் விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குறிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.
இந்நிலையில் பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் பெயரை வெளியிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட எஸ்பி அவகாஷ் குமார் "கொரோனா பாதிக்க்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டவர்கள் பவேஷ் குமார் பார்தியா, சுமோத் குமார், ஓம் பிரகாஷ் ரசாக் ஆகியோர் மீது முதல் தகவலறிக்கை பதியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒருமாத சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவகாஷ் குமார் "இந்த மூவரும் பாதிக்கப்பட்ட நபர்களின் புகைப்படங்களை வாட்ஸ்ஆப் குழுவில் பகிர்ந்துள்ளனர். பெகுசராய் மாவட்டத்தில்தான் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இங்கு மொத்தம் 18 குடும்பங்கள் கொரோனா பாதிப்பின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.