“வீடியோ வெளியிட்டு கட்டுமானத் தொழிலாளி தற்கொலை” - ட்விட்டரில் பகிர்ந்து சந்திரபாபு நாயுடு கேள்வி 

“வீடியோ வெளியிட்டு கட்டுமானத் தொழிலாளி தற்கொலை” - ட்விட்டரில் பகிர்ந்து சந்திரபாபு நாயுடு கேள்வி 
“வீடியோ வெளியிட்டு கட்டுமானத் தொழிலாளி தற்கொலை” - ட்விட்டரில் பகிர்ந்து சந்திரபாபு நாயுடு கேள்வி 
Published on

கட்டிடத் தொழிலாளி ஒருவர் வேலை இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வீடியோ பதிவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மணல் கொள்ளையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் மணல் கொள்ளை அதிகமாக நடைபெற்றதாக குற்றஞ்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் இவரது அதிரடியான கெடுபிடிகளால் கடந்த மூன்று மாதங்களாக கட்டுமானத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்கலில் கட்டுமானத் துறையைச் சார்ந்த மூன்று நபர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் விவாத பொருளாக மாறி வரும் வேளையில் ஒருவர் இந்தப் பிரச்னையால் வேலையை இழந்து தவிப்பதாகவும் இனிமேல் உயிர் வாழ்வதற்கான சூழலே இல்லை என்று கூறி, தூக்கிட்டு கொண்டுள்ளார். அதனை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையாக பதிவும் செய்துள்ளார்.

ஆகவே இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி வருகிறது. கதறக் கதற அவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ பதிவை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தற்கொலை செய்து கொண்டவர் பெயர் வெங்கடேஷ் என்பது தெரிய வந்துள்ளது. அவர் குண்டூர் மாவட்டத்தில் பல காலமாக வாழ்ந்து வரும் கட்டுமானத் தொழிலாளி. பிம்பர் வேலை செய்து பிழைத்து வரும் இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்கொலைக்கு முன், “கடந்த சில மாதங்களாக கட்டுமானத் தொழில் முடங்கிப் போய் கிடக்கிறது. ஆகவே தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று தெலுங்கில் பேசி விட்டு தற்கொலை செய்துள்ளார்.  

இது குறித்து அவரது மனைவி ராஷி கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக அவர் வேலை இல்லாமல் தவித்ததாகவும் சிறு வயது முதலே அவருக்கு தெரிந்த ஒரே வேலை கட்டுமானத் தொழில் மட்டும்தான் என்றும் கூறியுள்ளார். மேலும் தங்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளதாகவும் அவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ உதவிகளுக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து சந்திரபாபு நாயுடு, “தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை பார்க்கும்போது நெஞ்சே உறைந்து விட்டது. கடந்த ஐந்து மாதங்களாக கட்டுமானத் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் தவிக்கும் நிலையை பார்க்கவே சங்கடமாக உள்ளது. இந்த அரசாங்கம் மிக வேகமாக செயல்பட்டு இந்த மக்களை மீட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com