2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இத்தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி சைனி தெரிவித்தார். சாட்சிகளின் வாய்மொழி வாக்குமூலங்கள்- ஆவணங்கள் இடையே முரண்பாடு உள்ளதாகவும், வாக்குமூலம் அளித்தவர்கள் சாட்சிக்கூண்டில் மாறுபட்ட தகவல்களை தெரிவித்ததாகவும் சைனி குறிப்பிட்டார்.
யூகங்கள் மற்றும் வதந்திகளை ஆதாரமாக கொண்டே குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அவற்றை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி குற்றஞ்சாட்டியவர்கள் அனைவரும் ஆதாரம் கேட்டபோது பின்வாங்கியதாகவும் கூறினார். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலுள்ள பல தகவல்கள் தவறானவை எனவும் குற்றப்பத்திரிகையை தயாரித்த சிபிஐ அதிலுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறி விட்டதாகவும் நீதிபதி சைனி கூறினார்.
2ஜி ஏலத்தில் தவறு நடந்தது என்பதை உறுதிபடக் கூறும் ஆவணங்களை யாராவது கொண்டு வருவார்களா..? என 7 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும் சைனி தெரிவித்தார். சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
2001-ஆம் ஆண்டில் அலைக்கற்றைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க கோரி தொலைத்தொடர்புத்துறைக்கு டிராய் பரிந்துரைத்ததாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி சைனி தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கொள்கை குறித்த ஆவணங்கள் புரியாத வகையில் உள்ளதாகவும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார். 4 லட்சம் பக்கம் ஆவணங்களைக் கொண்ட வழக்கை கையாண்ட இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி இறுதியாக தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.