மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர், 29 வருடத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 1990 ஆம் ஆண்டு, மேற்கு வங்க இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். அப்போது அவர் தனது வீட்டின் அருகே காங்கிரஸ் கட்சியின் பேரணியை தலைமையேற்று தொடங்கியபோது தாக்கப்பட்டார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
(லாலு ஆலம்)
இது தொடர்பான வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லாலு ஆலம் என்பவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு அலிப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் 29 வருடங்களுக்குப் பிறகு, போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி, லாலு ஆலம் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
‘இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த சிலர் இறந்துவிட்டனர். இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர். சாட்சிகளும் இப்போது உயிரோடு இல்லை. இந்த வழக்கை இன்னும் தொடர்ந்தால், பணமும் நேரமும் வீணாவதை தவிர வேறு எதுவும் கிடைக்காது என்பதால் அரசு, இந்த வழக்கை கைவிட முடிவு செய்தது’ என்று அரசு வழக்கறிஞரான ராதாகாந்த முகர்ஜி தெரிவித்துள்ளார்.