முதன்முறையாக 27 வயது பழங்குடியின பெண் ஒருவர் விமானத்தை இயக்கவுள்ளார்.
ஒடிசா மாநிலம் மலகன்கிரி பகுதியை சேர்ந்தவர் அனுபிரியா மதுமிதா லக்ரா (27). இவர் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர். இவரது தந்தை காவல்துறையில் காவலராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதல் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்காக அவர் அரசின் விமான பயிற்சி மையத்தில் சேர்ந்து பைலட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் இந்த மாதம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கவுள்ளார். இதன்மூலம் இவர் முதன்முறையாக விமானத்தை இயக்க உள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற உள்ளார். இது குறித்து அவரது தாய் மரினியஸ் லக்ரா, “அவளுடைய விமான பயிற்சிக்கு நாங்கள் மிகுந்த சிரமத்துடன் பணத்தை அளித்தோம். இதற்காக நாங்கள் வங்கியில் கடன் வாங்கினோம். மேலும் உறவினர்களிடமிருந்தும் பண உதவி பெற்றோம்.
எனினும் தற்போது எனது மகள் அடைந்திருக்கும் இடத்தை பார்த்து நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம். என்னுடைய மகள் பிற பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது. அத்துடன் அனைத்து பெற்றோரும் தங்களின் பெண் பிள்ளைகளின் கனவிற்கு ஆதரவு அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அனுபிரியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “அனுபிரியாவின் சாதனை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக திகழ்வார்” எனக் கூறியுள்ளார்.