தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்நிலையில் நேற்று அந்தப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமும் அது தொடர்பான செய்திகளும் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
ஹைதராபாத்தின் ஷாத்நகரை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. 26 வயதான இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு தனது வீட்டிலிருந்து பணிக்காக கொள்ளுரு கிராமத்திற்கு பைக்கில் அவர் சென்றிருக்கிறார். செல்லும் வழியில் அவரது பைக் திடீரென பஞ்ச்சர் ஆகியுள்ளது. இதையடுத்து தனது சகோதரி பாவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா, பைக்கை சரிசெய்ய தனக்கு சிலர் உதவி செய்வதாக கூறியுள்ளார். ஆனால், தனக்கு இங்கு இருப்பது மிகவும் சங்கடமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட பாவ்யா, அருகில் உள்ள டோல் கேட்டுக்கு சென்று விடு; அதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா தான் இருக்கும் இடத்தில், தெரியாத மனிதர்கள் பலரும், சரக்கு லாரிகளும் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தன் தங்கையிடம் ஒரு 5 நிமிடம் தன்னிடம் பேசிக் கொண்டு இருக்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து பிரியங்காவிடம் பேசிய பாவ்யா, 'பைக்கை விட்டு விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடு' என்று கூறியுள்ளார். பின்பு, சில நிமிடங்கள் கழித்து பாவ்யா போன் செய்தபோது பிரியங்காவின் மொபைல் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், பிரியங்கா காணாமல் போனது குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு எரிந்த நிலையில் சடலம் ஒன்று, பிரியங்கா வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில், அவர் பிரியங்காதான் என்பது உறுதி செய்தனர். பிரியங்கா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது.
இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றவாளியை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும் என்று, மகள் பிரியங்காவை பறிகொடுத்த தந்தை கொதித்துள்ளார். மேலும், ட்விட்டர் பக்கத்தில் #RIPPriyankaReddy என்ற ஹேஷ்டேக் தேசியளவில் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் "பிரியங்காவை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என கூறியுள்ளார். அத்துடன் பிரியங்காவிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.