மகாராஷ்டிரா புல்தானா பகுதியில் உள்ள சம்ருத்தி மகாமேரி விரைவுச் சாலையில், இன்று அதிகாலை 32 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், 25 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ANI தெரிவித்துள்ளது. இந்த கோர சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளது.
விபத்து குறித்து பேசியிருக்கும் புல்தானா துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி, “பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள 6-8 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிர் தப்பிய பேருந்து ஓட்டுநர் கூறுகையில், “ பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உறங்கி கொண்டிருந்தனர். பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்திருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.