உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை 25 -ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில் பெரோஸ் காந்தி அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் நேற்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில், 16 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. இப்போது 25 தொழிலாளர்கள் பலியானார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலியானவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிய முடியாத அளவுக்கு கருகியுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவத்தில், பலியானோர் குடும்பங்களுக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதிக அழுத்தம் காரணமாக, இந்தக் கொதிகலன் வெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.