உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த பெண்ணை அவரது சகோதரர்களே சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மயின்பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தினி காஷ்யப் (23). இவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் அர்ஜூன் குமார் (25) என்பவரை ஜூன் 12 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின்பு டெல்லியின் புறநகர் பகுதியில் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சொந்த கிராமத்தில் சாந்தினியின் சடலம் விவசாய நிலத்தில் நேற்று போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தினியின் கணவர் கூறும்போது "நவம்பர் 17 ஆம் தேதி டெல்லியில் எங்களை பார்க்க சாந்தினியின் சகோதரர்கள் வந்தனர். நவம்பர் 17 ஆம் தேதி சாந்தினியை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். பின்பு நவம்பர் 20 ஆம் தேதி சாந்தினி என்னுடன் போனில் பேசினார், அப்போது இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதிலிருந்து அவளின் செல்போன் அணைத்துவைக்ப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையில் தகவல் கொடுத்தேன். அதன்படி விசாரணை மேற்கொண்டதில் சாந்தினி இப்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்" என்றார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் சாந்தினியின் இரு சகோதரர்களை போலீஸ் விசாரித்தது. அப்போது தங்களுடைய சகோதரி பட்டியலின இளைஞரை திருமணம் செய்ததால் கோபத்தில் திட்டமிட்டு சுட்டுக்கொன்றோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.