கேரளா மலப்புரத்தை அடுத்து இருக்கும் கொண்டோட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் டேனிஷ் மின்ஹாஜ் (21) என்ற இளைஞர். கடந்தவாரம் இவரது தந்தை ஒரு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காரை கண்ட டேனிஷ் மின்ஹாஜுக்கு அதை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. தனது தந்தையிடம் காரை ஓட்டவேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார். அதற்கு அவரது தந்தையோ, ‘உனக்கு கார் ஓட்டுனரின் உரிமம் இல்லை... அதைப்பெற்ற பின் காரை ஓட்டலாம்’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் பிடிவாதமாக டேனிஷ் மின்ஹாஜ் தனது தந்தையிடம் காரை ஓட்டியே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். ஆனால் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டினால் காவல் துறையில் அபராதம் கட்டவேண்டி வருவதுடன், எங்காவது விபத்து நடக்க வாய்பிருப்பதால், காரை ஓட்டக்கூடாது என்று கூறி காரின் சாவியை எடுத்து மறைத்து வைத்துள்ளார் அவரது தந்தை.
இதனால் கோபம் கொண்ட டேனிஷ் மின்ஹாஜ், நேற்று மாலை வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து காரின் மீது ஊற்றி நெருப்பை பற்றவைத்துள்ளார். இதில் காரானது முற்றிலும் எரிந்துவிட்டது. மேலும் வீட்டை ஒட்டி வாகனமானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், வீடும் சேதமடைந்துள்ளது.
மகனின் இச்செயலைக்கண்ட அவரது தந்தை, மகன் குறித்து தானே போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் டேனிஷ் மின்ஹாஜை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.