கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கவும், மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்தவும் கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்தியபோதும், அதன் பரவல் எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுமுடக்க காலங்களிலும், 2020 ஆம் ஆண்டில், இந்திய பல கண்டன ஆர்ப்பாட்டங்களையும், கலவரங்களையும், மோசடிகளையும் சந்தித்துள்ளது. அப்படி நாட்டின் கவனத்தை ஈர்த்த டாப் 10 சம்பவங்கள் இங்கே...
இந்தியக் குடியுரிமை சட்ட திருத்தம் 2019:
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் டிசம்பர் 2019-ல் அமலுக்கு வந்தது. இந்தக் குடியுரிமை சட்ட திருத்ததோடு, தேசிய குடியுரிமை பதிவேட்டையும் (NRC) எதிர்த்து அசாமில் போராட்டம் வெடித்தது. வெளிநாட்டிலிருந்து, 1971ம் ஆண்டிற்கு பிறகு புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை அசாம் மக்கள் எதிர்த்தனர். பின்னர் ஜனவரி மாதம், டெல்லியில் குறிப்பாக ஷாஹீன் பாக் என்னும் இடத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன போராட்டங்கள் வெடிக்க தொடங்கின.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சார்ந்து பின்பு இந்தியாவில் குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் இந்த குடியுரிமை சட்டத்தை பயன்படுத்தி, குடியுரிமை பெறுவதை தடை செய்தும், அவர்கள் குடியுரிமை பெறுவதற்கு வேறு வழிகளை நாட வேண்டி வந்ததையும் எதிர்த்தும் போராட்டங்கள் ஷாஹீன் பாக்கில் நடந்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 82 வயதுடைய பில்கிஸ் பானு பாட்டி, 'டைம்' இதழில் தலைசிறந்த மக்கள் செல்வாக்கு உடைய 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரை அனைவரும் 'தாதி' என்று அழைக்கின்றனர். இந்தப் போராட்டம் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாகவும் கைவிடப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்களின் துயர நாட்கள்...
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் வேறு வேறு இடங்களில் பணிபுரிந்து, வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி, வருவாயுமின்றி தங்களது சொந்த ஊருக்கு கால்நடையாக புறப்பட்டனர். தொழிலாளர்கள் பலரும் தங்கள் வீடு திரும்ப பல்வேறு வழிகளை கையாண்டனர். இதில், பல நூறு கி.மீ தொலைவிற்கு நடந்தே சென்றவர்களில் பலரும் வழியில் பல்வேறு காரணங்களால் பலியாகினர். இவர்களை தடுக்க முயன்ற போலீஸாருக்கு அஞ்சி ரயில் பாதை வழியாகவும் பலர் நடந்து சென்றனர்.
சாலையில் நடந்து போகும் வழியில் குழந்தை பெற்ற கர்ப்பிணி, கைக்குழந்தையோடு சென்ற தாய், குழந்தையை சூட்கேஸின் மீது படுக்க வைத்து இழுத்து சென்ற தாய், தனது தாயை இடுப்பில் சுமந்து சென்ற மகன், மனைவியை தோளில் சுமந்த கணவன் என புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து வெளியான ’நடை இந்தியா’வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் வைரலாகி காண்போர் நெஞ்சை உலுக்கியெடுத்தது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரலெழுப்பி வந்தன. இது மத்திய அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே 75 சதவீத தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாக திரும்பிவிட்டனர் என்பதே அப்போதைய களநிலவரமாக இருந்தது.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு:
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அந்தப் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இளம்பெண் உயிரிழந்த செய்தி வெளியானதும் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் , சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்படைந்தது. ஹத்ராஸ் நகரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இறந்த நாளன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் அந்தப் பெண்ணின் உடல் ஹத்ராஸ் அருகே சந்த்பா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பூல் கார்கி கிராமம் அருகே தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பானது.
ஆரம்பத்தில் உத்தரப் பிரதேச மாநில போலீசார் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து, இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரித்து வருகிறது. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தீப், லவ்குஷ், ரவி, ராமு ஆகிய நான்கு பேர் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
லடாக்கில் இந்தியா-சீனா மோதல்:
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இந்தியா - சீனா ராணுவப் படைகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது. கடைசியாக 1975-ம் ஆண்டு இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லை இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நான்கு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது என இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருக்கும் சூழலில் இத்தாக்குதல் நடைபெற்றது இந்தியா - சீனா எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
வேளாண் சட்டங்களும் விவசாயிகள் போராட்டங்களும்:
கோவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட 2020-ன் இறுதியில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள், டெல்லியில் மற்றொரு போராட்டத்தை அரங்கேற்றியது. ’டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலில் அவசர சட்டமாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மூலம் விவசாய பொருட்களை விற்பதலிலும், தனியார் சந்தைகளை ஊக்குவிக்கும் பொழுது பெரும் நிறுவன விலை கொள்கையினால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைவார்கள் என்பது இவர்களின் கவலை. விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அரசு தகுந்த பதில் அளிக்க தவறிவிட்டதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. போராட்டமும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
டெல்லி கலவரம்:
டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம், இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர் மற்றும் ஆதரிப்பவர்களிடையே கலவரத்தை உண்டாக்கியது. இந்த இரு பிரிவினர்களுக்கும் இடையே வன்முறை பிப்ரவரி 24 அன்று தொடங்கியது. வன்முறை கட்டுப்பாட்டினை இழந்த காரணத்தால், 53 பேர் மரணம் அடைந்ததோடு, 200 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
டெல்லி போலீசாரால் குற்ற வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்தது. அதில், கலவரத்தை ஆரம்பித்த நபர் அல்லது நிகழ்வு குறித்து எந்தத் தெளிவுகளும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் உமர் காலித் மற்றும் அதே பல்கலை.யில் பயிலும் ஷர்ஜீல் இமாம் குற்றவாளிகள் என குறிப்பிட்டு உள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா, வன்முறை தூண்டும் வண்ணம் பேசியதாகவும், அவரை விசாரிக்காதது குறித்தும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் கலவரம்:
ஆகஸ்ட் 11 அன்று, முகமது நபியை பற்றிய அவதூறான செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினரை எதிர்த்து கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் ஹல்லி மற்றும் கடுகொண்டன்கஹல்லி பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை அடித்து நொறுக்கினர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தி மற்றும் அவரது சகோதரியின் வீட்டை நோக்கியே போராட்டகாரர்களின் இலக்கு இருந்தது. பெரிய அளவில் வன்முறைகள் ஆங்காங்கே வெடித்தன. மேலும், தீயினால் சேதம் பெருமளவில் நடந்தது. இந்தப் போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேரையும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டனர்,
இந்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு விசாரணையில் உள்ளது. தேசிய புலனாய்வு விசாரணையின் முன்னரே, போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பெங்களூரு போலீஸாரால் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு குழு மேலும் 100 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம்:
ஜூன் மாதத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பாலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுஷாந்தின் தந்தை பீகார் காவல் துறையில் சுஷாந்தின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக வழக்கு பதித்தார். பிஹாரில் இருந்து மும்பையில் வழக்கினை விசாரிக்க வந்த போலீசாரை கொரோனவை காரணம் காட்டி தனிமைப்படுத்தியதை, மகாராஷ்டிரா போலீஸ் மற்றும் அரசு இந்த வழக்கு விசாரணையை நிறுத்தவே இவ்வாறு செய்கிறது என்று பீகார் ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணையை அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. இருந்தபோதும் பீகாரின் ஜனதாதள கட்சி, பாஜக மற்றும் மும்பையின் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கருத்து மோதல்களாகி, பின்னர் கங்கனா ரணாவத் மற்றும் சிவசேனா கட்சியின் கருத்து மோதல்களாக முடிந்தது.
இந்த விசாரணைக்கு மத்தியில் பாலிவுட் பிரபலங்கள் சிலர் சட்டவிரோதமாக போதைப் பொருட்களை பரிமாற்றம் செய்ததாக சுஷாந்தின் தோழி ரியா சக்ரபோர்ட்டி 4 வாரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இப்போது இந்த வழக்கு பாலிவுட்டின் போதை பொருட்கள் பயன்பாட்டினை மையமாக வைத்து இந்த வழக்கு நடைபெறுகிறது. இதனிடையே, கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பிரச்னையில் கவனம் குவிக்காமல், இந்த விவகாரத்தையே தொடர்ச்சியாக ஹைலைட் செய்தது, தேசிய ஊடகங்கள் சிலவற்றின் மீது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கேரளா தங்க கடத்தல் வழக்கு:
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி தூதரகத்திற்கு வந்த பார்சலை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதுவரை 20 பேர் வரை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். ஸ்வப்னாவுடன் கூட்டாளியாக செயல்பட்ட கும்பல், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் முதல் நடப்பு 2020ம் ஆண்டு ஜூன் வரை சுமார் 19 முறை தங்கத்தை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் மாதத்தில் நான்கு முறை, டிசம்பரில் 12 முறை, ஜனவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தலா ஒருமுறை சட்டவிரோதமாக தங்கம் கடத்தி உள்ளனர். ஸ்வப்னாவும், அவரது கும்பலும் டிசம்பரில் மட்டும் 36 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர். இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. கேரள தேர்தல் அரசியலையும் இது உலுக்கியது.
ஜம்மு - காஷ்மீர் ரோஷ்ணி நில மோசடி:
2001ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி குடியிருப்பவர்களிடம் ஒரு தொகை பெற்றுக்கொண்டு, அந்த இடத்தை அவர்களுக்கே விற்று, அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டு ஜம்மு - காஷ்மீர் பகுதியின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, ரோஷினி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.25.000 கோடி ஈட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின் உதவியைக்கொண்டு, ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு சில முக்கிய புள்ளிகள் நிலத்தை அபகரித்து உள்ளார்கள் என்று 2014-ம் ஆண்டு தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. ரோஷினி திட்டத்தின் கீழ் சட்டத்திற்கு புறம்பாக நடந்த இந்த நில அபகரிப்பு குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இதன் மீது நடந்த விசாரணையில், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ அமைப்பு இந்த வழக்கு விசாரணையை தற்போது நடத்தி வருகிறது.