செய்யாத குற்றத்துக்காக, 20 வருட சிறை தண்டனை அனுபவித்த இளைஞர், போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கண்டபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சாது பிரதான். கடந்த 1997 ஆம் ஆண்டு இவரது கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகியிருந்தன. இந்த வழக்கை விசாரித்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் சாது பிரதானை கைது செய்தனர். பின்னர் விசாரணை நீதிமன்றம் கடந்த 1999 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை கொடுத்து சிறையில் தள்ளியது.
செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா என்று விரக்தி அடைந்த சாது, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். விசாரணை இழுத்து இழுத்து 20 வருடத்துக்கு வந்துவிட்டது. அதற்குள் பாதி வாழ்க்கையை சிறையிலேயே கழித்துவிட்டார் சாது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த திங்கட்கிழமை வெளியானது. அதில், போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி, நீதிமன்றம் சாதுவை விடுதலை செய்துள்ளது.