கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா அம்மன் கோயிலில் இன்று ஆண்டு திருவிழாவிற்குப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கேட்டில் திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்த கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் அலறியடித்து ஓடியுள்ளனர். அப்போது பக்தர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு கீழே விழுந்து ஓடியதால் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கோயில் நிர்வாகத்தினர் காயமடைந்த பக்தர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் சரி செய்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.