சமீபகாலமாக நாடு முழுவதும் தெரு நாய்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைத் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் பர்வானி நகரில் தெருநாய்கள் கடித்ததில் 2 வயது குழந்தை, நேற்று (பிப்.27) மரணமடைந்தது.
மத்தியப் பிரதேசம் பர்வானி நகரைச் சேர்ந்தவர் ரவி டோட்வே. இவரது மனைவி அனிதா டோட்வே. இவர்களின் 2 வயது குழந்தை சௌரியா. சம்பவத்தன்று, வீட்டைவிட்டு வெளியே வந்த குழந்தையை, தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி மக்களே அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை, “வீட்டின் கதவுகள் திறந்திருந்ததால் தன் மகன் வெளியே சென்றுவிட்டான். அவன் சென்றதை தாங்கள் யாரும் கவனிக்கவில்லை. இதனால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெரு நாய்களை பிடிப்பதற்கு முனிசிபல் கவுன்சில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் விலங்கு நல ஆர்வலர்களும் சமூக அமைப்புகளும் அதை எதிர்ப்பதால், அவர்களும் விலகிச் சென்றுவிடுகின்றனர்” என கவலையோடு தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிறுவனின் தாயார் அனிதா, “எங்கள் வீட்டுக்கு அருகில் ஆட்டிறைச்சி சந்தை உள்ளது. அங்கு மிச்சப்படும் கழிவுகளை இங்கேதான் வந்து கொட்டுகின்றனர். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அவைகளுக்கு இந்த கழிவுகள் கிடைக்காதபோது மனிதர்களைத் தாக்குகின்றன” என்றார்.
இந்த சம்பவம் குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் சி.இ.ஓ. குஷால் சிங் துத்வே கூறும்போது, "நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெருநாய்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவற்றைப் பிடிப்பது சற்று கடினம். நாய்களைப் பிடிக்கும்போது, விலங்கு நல ஆர்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.
சமீபத்தில் தெருநாய்கள் கடித்ததில் டெல்லியில் 2 சிறுமியும் உ.பியில் 4 வயது சிறுமியும் இறந்துபோயினர் என்பது குறிப்பிடத்தக்கது.