’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு!

’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு!
’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு!
Published on

தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்த கேரளப் பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கருதி போலீசார், இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கனகதுர்கா மலப்புரம், பெரிந்தலமன்னாவில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றார். அப்போது சபரிமலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் சுமதியம்மா சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாமியார் மீது போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 இந்நிலையில் தன்னை கனகதுர்கா கடுமையாகத் தாக்கியதாகக் கூறி மாமியாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனகதுர்கா மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனகதுர்காவும் பிந்துவும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்ப தாகவும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இவர்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்தியா ஜெய்சிங் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com