நாடு முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தவிர, அவர்கள் ஏற்படுத்தும் விபத்துகளும் அதிகரித்துவருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம், புனேயில் போதை சிறுவன் ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளானதில் 2 ஐடி ஊழியர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தவிர, அந்த விபத்தை மறைக்க மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர், மருத்துவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சமீபத்தில் அதே புனே அருகே மீண்டும் ஒரு விபத்து நடைபெற்றது. சாலையை கடக்க சென்ற பெண் மீது கார் ஒன்று மோதியதில் அப்பெண் தூக்கி எரியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதேபோன்றதொரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றுள்ளது. நாக்பூரின் திகோரி பகுதியில் குடிபோதையில் பொறியியல் மாணவர் ஓட்டிச் சென்ற கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது மோதியதில் இரண்டு பெண்கள் நேற்று உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக வதோடா போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், “பொம்மைகள் விற்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடைபாதையில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 4 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொம்மை வியாபாரிகள், கடந்த 8 மாதத்திற்கு முன்புதான் பிழைப்புக்காக நாக்பூர் வந்துள்ளனர். நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது பூஷன் லன்ஜேவார் என்ற பொறியியல் மாணவர் என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அவருடன் காரில் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களும் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ள அவர்கள், மாணவர் பூஷன் லன்ஜேவாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.