மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்த தோ்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. வேட்பாளர்களின் திடீா் மறைவால் 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதற்கிடையில் மேற்கு வங்கம் மாநிலம் ரானாகாட் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஜகந்நாத் சா்க்கார் மற்றும் கூச் பிகார் மக்களவைத் தொகுதி உறுப்பினரான நிசித் பிரமானிக் ஆகிய இருவரும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் ஜகந்நாத் சர்க்கார் மற்றும் நிசித் பிரமானிக் இருவரும், தங்கள் எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். ஏற்கெனவே எம்.பி.யாக இருப்பதால் அப்பதவியிலேயே தொடரும் நோக்கில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அம்மாநில பாஜக தலைமை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் வேட்பாளர்களின் மறைவால் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 2 தொகுதிகள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள 2 தொகுதிகள் என சேர்த்து 4 தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.