திருடர்கள் என பரவிய வதந்தி : கும்பல் தாக்கியதில் 2 சாதுக்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

திருடர்கள் என பரவிய வதந்தி : கும்பல் தாக்கியதில் 2 சாதுக்கள் உட்பட மூவர் உயிரிழப்பு
திருடர்கள் என பரவிய வதந்தி : கும்பல் தாக்கியதில் 2 சாதுக்கள் உட்பட மூவர் உயிரிழப்பு
Published on

மகாராஷ்டிராவில் 2 சாதுக்கள் உள்பட 3 பேரை கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கிராமங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு சாதுக்கள் கடந்த வியாழக்கிழமை துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது காரில் வந்தவர்கள் உடல் உறுப்புகள் மற்றும் சிறுநீரகங்களை திருடுவதற்காக குழந்தைகளை கடத்தி வருவதாக வதந்தி பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பயங்கர ஆயுதங்களுடன் அந்த காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் காரில் இருந்த 70 வயது முதியவர் உட்பட 3 பேரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அந்த கும்பல் போலீசார் உட்பட அனைவரது மீதும் தாக்குதல் நடத்தியது.

குறிப்பாக, திருடர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேர் மீது அந்த கும்பல் கற்களை கொண்டு கொடூரமாக தாக்கியது. இந்த தாக்குதலில் 2 சாதுக்கள் மற்றும் கார் டிரைவர் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 100-க்கும் அதிகமானோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதலில் போலீசாரும் தாக்கப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பால்கரில் நடந்த சம்பவம் ‘அதிர்ச்சியூட்டுகிறது, மனிதாபிமானமற்றது' என்று முன்னாள் முதலமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கண்டித்துள்ளார். உயர்மட்ட விசாரணைக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே கொல்லப்பட்ட மூன்று பேர் சுஷில் கிரி மகாராஜ் (35), நிலேஷ் தெல்கனே (35), சிகானே மகாராஜ் கல்பவ்ரிக்ஷ்கிரி (70) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com