மாட்டிறைச்சி விற்றதாக சந்தேகத்தின்பேரில் இருவரின் ஆடைகளை கழற்றி, சாட்டையடி கொடுத்து அரை நிர்வாணமாக ஊர்வலம் கூட்டிவந்த கொடுமை சட்டீஸ்கரில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சக்கர்பதா காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நர்சிங் தாஸ்(50) மற்றும் ராம்நிவாஸ் மெஹர்(52) என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை மூட்டையை கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த கூட்டத்தினர், அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என விசாரித்துள்ளனர்.
அந்த இருவரும் மூட்டையில் மாட்டிறைச்சி இருப்பதாக கூறியதுதான் தாமதம், அக்கூட்டத்தினர் இருவரின் ஆடைகளையும் கிழித்து, சாட்டையால் அடித்து, அரை நிர்வாணமாக்கி அவர்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே கட்டி ஊர்வலமாக வீதிகளில் இழுத்துச்சென்றனர். ஒரு கூட்டமே அவர்களை வீடியோ எடுத்தபடி பின் சென்றது. பின்னர் இருவரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் அக்கூட்டத்தினர்.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடங்களில் பரவி வைரலாகி வருகிறது. இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சியை போலீசார் கால்நடை மருத்துவர்களிடம் ஆய்வுக்காக ஒப்படைத்துள்ளனர். ஆனால் அது மாட்டிறைச்சியா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களை அடித்து துன்புறுத்திய கூட்டத்தினர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்டீஸ்கர் விவசாய கால்நடை பாதுகாப்பு சட்டத்தின்படி, ஒருவரும் கால்நடைகளின் இறைச்சியை விற்கவோ அல்லது வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.