ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த தோஷம் பகுதியில் உள்ள தாதம் சுரங்கப் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து டீவீட் செய்துள்ள முதல்வர் மனோகர் லால் கட்டார், விரைவான மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், காயமடைந்தவர்களுக்கு உடனடி உதவி செய்வதற்கும், உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.
இது தொடர்பாக மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்ட வேளாண் அமைச்சர் ஜே.பி.தலால், " இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இங்குள்ள சுரங்க ஒப்பந்ததாரரின் கூற்றுப்படி, உள்ளே இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் சிக்கியிருக்கலாம்" என்று கூறினார்.
தாதம் சுரங்கப் பகுதி மற்றும் கானாக் பஹாரி பகுதியில் சுரங்கப் பணிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்கியதைத் தொடர்ந்து சுரங்கப் பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.