அசாமில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அசாமில், ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு, தரங் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு, வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அங்கு வசிப்போரை வெளியேற்றும் பணிகளின் ஒரு பகுதியாக தோல்பூர் என்ற இடத்திற்கு காவல் துறையினர் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் வெடித்தது. காவல் துறையினர் முதலில் தடியடியும், பின்னர் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். துப்பாக்கியால் சுடப்பட்டு விழுந்த ஒருவரை காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர் மீது புகைப்படக்கலைஞர், கண்மூடித்தனமாக ஏறி மிதித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூட்டில் சதாம் உசேன், ஷேக் ஃபோரிட் என்ற இருவர் கொல்லப்பட்டனர். மோதலில் காவல் துறையினர் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமானோர் காயமுற்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், சம்பவம் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. குண்டு பாய்ந்து விழுந்தவர் மீது ஏறி மிதித்த புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுஷாந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சரின் உடன்பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.