நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு! தீவிரமாக கண்காணிக்கும் கேரள அரசு

கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அரசு தீவிரமாக நிலைமையை கண்காணித்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ்
நிபா வைரஸ்புதிய தலைமுறை
Published on

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒருவரும் நேற்று (செப்.11) ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர்.

இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதி உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. இன்று மாலை சோதனை முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் ’வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்றும், இதற்காக மத்திய அரசின் சிறப்பு குழு கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூலில் காணொளி மூலம் பதிவிட்ட பினராயி விஜயன், இறந்தவர்களுடன் தொடர்பின் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், கவனமாக இருப்பதே நிலைமையை சமாளிப்பதற்க்கான திறவுகோல் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சுகாதாரத்துறை தயாரிக்கும் செயல் திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோழிக்கோடு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சரும் அங்கு பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கேரளாவில் 2018ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது. பின்னர் 2021ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com