ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள பாரமுல்லா எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு காவலர் உட்பட மூன்று பேர் மரணமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த மூன்றாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையினர் அடங்கிய பாதுகாப்பு படை கிரேரியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, சில பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். "இந்த தாக்குதலில் நாங்கள் மூன்று வீரர்களை இழந்துவிட்டோம். சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கூடுதல் விவரங்களை உறுதி செய்கிறோம்" என்று காவல்துறை ஐஜி விஜயகுமார் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் நடந்த தேடுதல் நடவடிக்கையில் இன்று பிற்பகல் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்; மேலும் இருவர் சிக்கியுள்ளதாகவும் நம்பப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் பாதுகாப்புப் படையினர் மீதான மூன்றாவது தாக்குதல் இதுவாகும். ஆகஸ்ட் 14 ம் தேதி, ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நோவ்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். ஆகஸ்டு 12 ஆம் தேதி ஹைஹாம் பகுதியில் ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.