கொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..!

கொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..!
கொரோனா பயத்தில் தற்கொலை, மரணம் : இந்தியாவில் தொடரும் சோகம்..!
Published on

கொரோனா வைரஸ் பாதித்திருக்குமோ என ஒரு தற்கொலை மற்றும் விபரீத மரணம் என இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குள் நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். பலர் கொரோனா வைரஸ் வந்துவிட்டால், தனிமையில் அடைத்துவிடுவார்களே என பயந்து கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில், கொரோனா அச்சத்தில் இந்தியாவில் இரண்டு உயிர்கள் பிரிந்துள்ளன.

ஹரியானாவின் பானிபட் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் கார்னல் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது போல தோன்றியதால், அவரை மருத்துவமனையின் 6வது தளத்தில் இருந்த கொரோனா சிறப்பு வார்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், தனிமை வார்டில் இருக்க பிடிக்காமல் அங்கியிருந்து அந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார். 

இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் பார்க்காத நேரத்தில், தனது படுக்கையில் இருந்த போர்வை, பாலிதின் துணி மற்றும் சட்டை ஆகியவற்றை கயிறு போல திரித்து ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அவர் இறந்துவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால் அந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் பின்னர் வெளியாகி, அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் இருமல் மற்றும் சளியால் பாதிப்படைந்துள்ளார். தனக்கு கொரோனா இருக்குமோ என எண்ணி தன்னை தானே அந்த நபர் தனிமைப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கொரோனா பயத்தில் அந்த நபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் தற்கொலை செய்துகொண்ட நபர் ஒருமுறைகூட அரசு மருத்துவமனையை அணுகி தனக்கு கொரோனா இருக்கிறதா ? இல்லையா ? என்பதை உறுதி செய்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.

கொரோனா என்பது கொடிய வைரஸ் தொற்று தான். ஆனால், அதில் இருந்து மீண்டு வரமுடியாது என்றல்ல. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் உலகில் மீண்டு வந்துள்ளனர். இந்தியாவிலும் பலர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உலக அளவில் கொரோனா தொற்று உடையவர்களில், 90% பேர் ஆரம்பக் கட்ட பாதிப்பில் தான் இருக்கின்றனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மற்ற வைரஸ்களை காட்டிலும் கொரோனாவுக்கு இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே கொரோனா பற்றிய அச்சத்தை விடுத்து, கை கழுவுதல், தனித்து இருத்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட்டு நம்மையும், நம் உலகையும் காக்க வேண்டுமே தவிர, கொரோனா அச்சத்தில் உயிரை விடுவது கொரோனாவிற்கு நம் உலகையே பலி கொடுப்பதற்கு சமம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com