இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த கஜிந்தர் பால் சிங், தாம் பாகிஸ்தானில் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1981ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து அமிர்தசரஸ் வழியாக சுமார் 111 பயணிகளுடன் ஸ்ரீநகருக்கு செல்லவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் பாகிஸ்தானின் லாகூருக்கு கடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்தலில் ஈடுபட்ட கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டு தண்டனை நிறைவடைந்த நிலையில், 5 பேரில் கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் ஆகியோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் வெளியே வந்த கஜிந்தர் பால் சிங் காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை தேடப்படும் தீவிரவாதியாக காவல்துறை அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது காலிஸ்தான் ஆதரவாளர் கஜிந்தர் பால் சிங் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், குருத்வாரா முன்பாகத் தான் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து டெல்லி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சைரஸ் மிஸ்ட்ரி மரணம் எதிரொலி: கார் தயாரிப்பில் அமலாக உள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன?