1971 ஆம் ஆண்டில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பின், இந்த நாளில்தான் (டிசம்பர்-16) பாகிஸ்தான் படைகளின் தலைவர் ஜெனரல் ஏஏ கான் நியாசி 93,000 துருப்புகளுடன் இந்தியப் படைகள் முன் நிபந்தனையின்றி சரணடைந்தார். இந்த வரலாற்று சம்பவம்தான் வங்கதேசம் நாடு உருவாக வழிவகுத்தது.
1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது வங்கதேசம் உருவாக வழிவகுத்த, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படும் ‘விஜய் திவாஸின்’ 50 வது ஆண்டு விழா இன்று. 1971 டிசம்பர் 3 ஆம் தேதி வங்காள முஸ்லிம்களையும், இந்துக்களையும் காப்பாற்றுவதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக போர்தொடுக்க இந்திய அரசு முடிவு செய்ததால் இந்தோ-பாக் போர் நடந்தது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த அந்த போர் வெறும் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது, அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் படைகளின் முன் சரணடைந்தது. இது பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். இந்தப் போர் 20 ஆம் நூற்றாண்டின் மிக வன்முறை நிறைந்த யுத்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த போர் பெரிய அளவிலான அட்டூழியங்களை கண்டது. இந்தப் போரினால் 10 மில்லியன் அகதிகள் வெளியேற்றப்பட்டதையும், 3 மில்லியன் மக்கள் பாகிஸ்தான் படைகளால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, டிசம்பர் 16, 1971 அன்று சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, அப்போதைய இந்திய ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் சாம் மானேக்ஷா வெளியிட்ட செய்தி பாகிஸ்தானுக்கு இன்றும் மிகப்பெரிய தாக்கத்துடன் உள்ளது. டிசம்பர் 13, 1971 அன்று அவர், "நீங்கள் சரணடையுங்கள் அல்லது நாங்கள் உங்களை முழுவதுமாக துடைத்து அழிப்போம்" என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார், அதன்பின் பாகிஸ்தான் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தன.
இந்த ஆண்டு டிசம்பர் 16 முதல், ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ என்று அழைக்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டினை நாடு கொண்டாடுகிறது.
இந்தப் பொன்விழா ஆண்டில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. தொடக்க நிகழ்வு இன்று டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வெற்றி ஜோதி ஏற்றினார்.