\மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மொட்டை அடித்து தனது முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கியது நெகிழ வைத்துள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் கிரண்(19). இவர் அங்கு உள்ள கல்லூரி ஒன்றில் இதழியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தலைமுடியை அதிகமாக வளர்த்து அதனைத் தற்போது மொட்டை அடித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க தானமாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கிரண், “எனது பள்ளி பருவத்தில் நண்பர் ஒருவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் கிமோதெரபி சிகிச்சையின் போது அவருக்கு முடி கொட்டியது. இதற்கு பிறகு அவர் விக் பயன்படுத்தினார். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மொட்டை அடித்த முடியை வாங்கி விக் தயாரிப்பதை கேள்வி பட்டேன்.
(கல்லூரி மாணவி கிரண்)
அப்போது நான் ‘பாய் கட்’ வைத்திருந்தேன். எனவே அன்று முதல் எனது முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்தேன். தற்போது நான் மொட்டை அடித்து எனது முடி அனைத்தையும் விக் செய்ய தானாமாக கொடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.