குஜராத்தில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி தன் சகோதரியுடன் மொடாசா நகருக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது சகோதரி மட்டும் வீடு திரும்பினார்.
குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அந்த பெண்ணின் சகோதரியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிமல் பர்வாட் என்பவர் அவரது காரில் பெண்ணை ஏற்றி சென்றதாகவும் இதுகுறித்து யார் கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாது எனவும் கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்யாமல் பெண்ணின் பெற்றோரை போலீஸ் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஜனவரி 3-ம் தேதி அந்தப் பெண்ணின் பெற்றோரை அழைத்த காவல் ஆய்வாளர் ரபாரி, காரில் வந்த நபருக்கும் உங்கள் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி சரியா பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் காணாமல் போன பெண் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஜனவரி 7 ஆம் தேதி பெண்ணின் தாத்தா, பிமல் பர்வாட் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது புகார் அளித்தார். மேலும் வழக்குப்பதிவு செய்ய மறுத்து காவல் ஆய்வாளர் ரபாரியை சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து குஜராத் துணை டி.ஜி.பி ஓஜ்ஹா கூறுகையில், “ஆரவல்லி பகுதி காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதில் காவல்துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டுள்ளனரா என்ற விசாரணையும் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.