பப்ஜி விளையாடியதாக கடந்த இரண்டு நாட்களில் 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 19 பேரை ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர்.
விளையாட்டு பிரியர்களை கவனத்தில் கொண்டு தினம் தினம் புதிது புதிதாக ஸ்மார்ட் போனில் கேம்கள் களம் இறக்கப்படுகின்றன. இப்போதைய ட்ரெண்டிங் கேமான பப்ஜியை, பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி வருகிறார்கள்.
இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட குஜராத் அரசு, பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டுமென சுற்றறிக்கை விடுத்தது. முன்னதாக நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியது.
அதன்படி ராஜ்கோட்டில் மார்ச் 9 முதல் முதல் ஏப்ரல் 30 வரை பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதாகவும், யாரேனும் பப்ஜி விளையாட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சட்ட விதி 188ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களில் பப்ஜி விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 19 பேரை ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமின் பெற்று பின்னர் விடுதலை ஆனார்கள்.
பப்ஜி குறித்து பேசிய மனநல மருத்துவர் த்ருவ், பப்ஜி விளையாட்டு நம் மனதை அடிமைப்படுத்தக்கூடிய விளையாட்டு. போலீசாரின் அறிவுறுத்தல் தான் இந்த விளையாட்டு போதையில் இருந்து வெளிவர உதவும் என தெரிவித்துள்ளார்.