எதிர்வரும் 2021 மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது அவசியமாவதால் 180 மில்லியன் பான் கார்டுகள் செயலிழந்து போகலாம் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதிகளவில் பண பரிமாற்றம் செய்பவர்கள் இந்த நடவடிக்கையில் சிக்குவார்கள்.
பெரியளவிலான தொகையை வைத்து ஆடம்பரச் செலவுகளை செய்துவிட்டு அதற்கான வரியை குறைத்து மதிப்பிட்டுக் காட்டும் தனிநபர்களும் இதில் கண்காணிக்கப்படுவார்கள். அதற்கு வருமான வரி சட்டத்தின் கீழ் வாய்ப்புகளும் உள்ளன.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், மியூச்சுவல்பண்ட்ஸ், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம் இந்த செலவு விவரங்களை வருமான வரித் துறை பெறுகிறது.
‘1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில் வெறும் 15 மில்லியன் மட்டுமே வருமான வரித் துறைக்கு பங்களிப்பு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் அண்மையில் இதை சுட்டிக்காட்டியிருந்தார். வரித் தளத்தை விரிவுபடுத்துவதற்கான அவசரத் தேவை இருப்பதாக எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன’ என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாத கணக்கெடுப்பின் படி நாட்டில் 50.95 கோடி பான் கார்டு பயனர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் 6.48 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கினை (ஐடிஆர்) தாக்கல் செய்துள்ளார்கள். அதில் 15 மில்லியன் பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 4.98 கோடி மக்கள் ஜீரோ டேக்ஸ் லயாபிலிட்டியையோ அல்லது செலுத்தப்பட்ட முழு வரியை கேட்டும் ஐ.டி.ஆர் விண்ணப்பித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை சுமார் 327.1 மில்லியன் பான் கார்டு பயனர்கள் மட்டுமே ஆதார் உடன் இணைத்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்பவர்கள் பான் - ஆதார் இணைப்பில் நிச்சயம் சிக்குவார்கள் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் வருமான வரித் துறை கண்காணிக்கும் உயர் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளின் பட்டியலை அரசாங்கம் விரிவாக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
அந்த பட்டியலை விரிவாக்கம் செய்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கல்வி கட்டணம், மின்சார நுகர்வு கட்டணம், பிசினஸ் கிளாசில் உள்நாட்டு விமான பயணம், நகைகள் வாங்குதல் மற்றும் ஆண்டுக்கு இருபதாயிரத்திற்கு மேல் சொத்து வரி செலுத்துபவர்கள், ஐம்பதாயிரத்திற்கு மேல் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் கட்டுபவர்களை எல்லாம் கண்காணிக்க வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.