குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா சவுதா வளாகத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹரியான மாநிலம் சிர்ஸா நகரில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகத்தில் இருந்த 18 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளதாக சிர்ஸா நகர துணை ஆணையர் பிரபுஜோத் சிங் தெரிவித்தார். அந்த சிறுமிகள் அனைவரும் தற்போது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
சிறுமிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் குர்மீத் ராம் ரஹீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குர்மீத் குற்றவாளி என்று நீதிமன்றம் சொன்னதும் அவரது ஆதரவாளர்கள் மிகப்பெரிய வன்முறையில் இறங்கினர். அதில் 38 பேர் பலியாயினர். 264 பேர் காயமடைந்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முடக்கப்பட்டிருந்த இணைய தள சேவைகள் மறுபடியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் சிர்ஸா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.