170 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட துறை. இந்தியாவில் மக்களுக்கு அறிமுகமான முதல் அறிவியியல் கண்டுபிடிப்பு. பெரும்பான்மையான இந்தியர்கள் மின் விளக்கைப் பார்ப்பதற்கு முன்பே இரயில் வண்டியைப் பார்த்தவர்கள்.
இந்த 170 ஆண்டுகால தொடர்ச்சியில் அதே வயதுள்ள மற்ற துறைகள் 10 மடங்கு மாற்றம் அடைந்திருக்கும் என்றால் ரயில்வே 3 மடங்கு அடைந்திருந்தாலே அதிகம்.
இப்பவும் பிரிட்டிஷார் அமைத்த ரயில் பாலங்களின் மீது நமது அதிவேக நவீன ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாம் ரயில்களில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அது ஓடும் தண்டவாளங்களை இணைக்கும் போல்ட், நட்டுகளின் ஆவரேஜ் வயது 70 ஆண்டுகள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்திய ரயில்வேயின் signal complexity, ஏர்பஸ் A380 fly by wire technology யில் கூட இருக்காது. தொடர்ச்சியான trial & error மூலம் உருவான சிஸ்டம் அது. Muscle memory போல தன்னியல்பாக சிக்னல்மேன்களின் கைகளும், டிராக் லைன்மேன்களின் அனுபவமும், ரயில் ஓட்டுநர்களின் பயிற்சியும் ஒத்திசைவாக செய்யும் மேஜிக் அது. எந்தவொரு பொறியியல் வல்லுநர்களுக்கும் அவை பெரிய புதிராகவே இருக்கும்.
சொல்லப் போனால் படித்தவர்களுக்கு எளிதில் புரியக்கூடாது என்பதற்காகவே அதை அப்படியே வைத்திருந்ததாக நண்பரின் அப்பா (ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்) சொல்லி கேட்டிருக்கிறேன்.
ரயில்வே பணிகள் தலைமுறை தலைமுறையாக வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. டிராக் லைன்மேன் தனது மகன்களை 12 வயதில் இருந்தே உடன் அழைத்துச் சென்று பயிற்சி தருவார்கள். எனவே அவர்கள் இறந்தால் வேறு வழியே இன்றி அந்தப் பையனுக்கு அதே வேலை கிடைக்கும். தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திராகாரர்களும், வட இந்தியாவில் பீஹாரிகளும் இதில் ஆதிக்கம்.
வாக்கி டாக்கி, வயர்லெஸ் எல்லாம் வரும் முன்னரே அவர்கள் அபாரமான தகவல் தொழில்நுட்ப முறையை கொண்டிருந்தனர்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.
ஒரு ஊர் ரயில்நிலையத்தை ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கிறது. அந்த ஊரில் நிறுத்தம் இல்லை. ஆனாலும், அங்கே ரயில்வே கேட் போட்டு சாலையை மூடியாக வேண்டும் அல்லவா? அதற்கு ரயில் 20 கிமீ தொலைவில் வரும்போதே, அதற்கு முன் இருந்த ரயில்வே கேட்கீப்பர் ரயில் கடந்து விட்டது என சிக்னல் மாற்றுவார். அந்த சிக்னல் மாறியவுடன், இந்த சிக்னல் லாக் ஆகி விடும். உடனே இந்த கேட்கீப்பர் கேட்டை மூடுவார். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு 6 அடி விட்டமுள்ள பிரம்பு வளையத்தை கையில் வைத்துக் காத்திருப்பார். ரயில் வேகமாக ஸ்டேஷனை கிராஸ் பண்ணும்போது, ரயில் ஓட்டுநர் கையில் அவர் கையில் இருக்கும் ஒரு வளையத்தை ப்ளாட்பாரத்தில் வீசிவிட்டு, லாவகமாக மாஸ்டர் பிடித்திருக்கும் வளையத்துக்குள் கையை கோர்த்து வாங்கிக் கொள்வார். இது ஒரு நொடிக்குள் நடக்கும் செயல். ஒருவேளை அந்த வளையத்தை வாங்க முடியவில்லை என்றால் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தி வாங்கி ஆகணும். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகவே நான் தினமும் ஸ்டேஷனுக்கு போய் நிற்பேன். (அப்படியே நானும் ரிங் வீச பழகிக் கொண்டேன் என்பது வேற கதை).
சரி! அப்படி என்ன அந்த வளையத்தில் இருக்கும்?
அதன் ஒரு புறத்தில் சின்னதாக ஒரு பிரம்பு பெட்டி கட்டப்பட்டிருக்கும். அதற்கு உள்ளே ஒரு இரும்புச் சாவி.
அதைக் கொண்டு போய் ரயில்வே கேட் லாக் பொருத்தினால்தான் கேட் திறக்க முடியும். அதன் பிறகுதான் வழக்கமான சாலைப் போக்குவரத்து. .
எனக்கு பிரமிப்பாக இருந்த அந்த விஷயம் உங்களுக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம்!
நம் கண் முன்னரே இப்படியான manual operations தான் எனில், நமக்குப் பின் என்னென்ன நடந்ததோ! லைன்மேன், கேட் கீப்பர்கள் குடித்து விட்டு மயங்கியதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் ஆங்காங்கே நின்று இருந்த காலமெல்லாம் உண்டு.
பழைய கதை இருக்கட்டும். இப்போது என்ன நடக்கிறது? இத்தனை காலம் ஆகியும் இன்னமும் 60% மனிதர்களைச் சார்ந்துதான் இத்தனை ஆயிரம் ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன.
பரம்பரையாக வேலை தரும் வழக்கத்தை நிறுத்தி, தேர்வு வைத்து ஆள் நியமனங்களை தொடங்கி விட்டோம். அதன் சாதகங்கங்கள் ஒரு புறம் இருந்தாலும் மரபு வழி தொடர்ச்சி அற்று விட்டது. அதே தண்டவாளம், அதே சிக்னல், அதே பாலம், அதே வழி! ஆனால் அதற்கெல்லாம் பழக்கமில்லாத ஊழியர்கள்.
ஒரே நாளில், ஒரே ஆண்டில் சரி செய்து நவீனமாக்கி விட முடியாத இராட்சச இயந்திரம் இது. ஆனால், தொடர் முயற்சியாக அதைச் செய்யாமல் போனது பெரும் குற்றம்.
எப்போதோ ஒரு முறை பெரும் விபத்து நேர்ந்தாலே அதிர்ச்சி அடைகிறோம். நியாயத்துக்கு இந்த சிஸ்டம் ஒவ்வொரு நாளும் விபத்து இல்லாமல் ஓடுவதற்குதான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும்.
ஆட்சியாளர்களுக்காவது பழியை சுமக்க நேரு இருக்கிறார். மக்களுக்கு விதியை தவிர வேறென்ன இருக்கு?
ட்விட்டரில் SKP கருணா எழுதிய ட்விட், அவரின் அனுமதிபெற்று இங்கு பகிரப்பட்டிருக்கிறது.