மத்திய பிரதேசத்தில் பள்ளிக்குச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள உஷா நகர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் விருந்தா திரிபாதி. இவர் குடியரசு தின கொண்டாட்ட ஒத்திகைக்காக புதன்கிழமை பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளியில் ஒத்திகையில் இருந்த விருந்தா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக விருந்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அச்சிகிச்சை பலனளிக்கவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துவருவதற்கு முன்பே விருந்தா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக, அவருடைய மாமா ராகவேந்திரா திரிபாதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு விருந்தாவுக்கு எந்தவித உடல் பிரச்னையும் இல்லை. அதீத குளிரால் அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். விருந்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு, மாரடைப்பால் கீழே விழுந்ததில் விருந்தாவின் தாடையில் பலத்த அடிபட்டிருப்பதாகவும், அவருடைய வயிற்றில் ஸ்நாக்ஸ் துகள்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்” என்று கூறினார்.
சிறுமி பள்ளிக்கு செல்லும்போது மெல்லிய ஆடையே அணிந்திருந்தார் எனவும், எனவே அவரால் குளிரை தாங்கமுடியவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பால் மரணமடைந்த சிறுமியின் கண்களை அவருடைய பெற்றோர் தானமாக அளித்துள்ளனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த இதய நிபுணர் அனில் பரணி, “கடுமையான குளிர் காலங்களில், குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை, மனித உடலிலுள்ள பல்வேறு ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது. இதனால் ரத்த கட்டிகள் உருவாகி, திடீர் இதய செயலிழப்பு ஏற்படுவதற்காக சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுடன், குளிர்காலத்திலும் உடற்பயிற்சி செய்வது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.