மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 16 பறவைகள் திடீரென்று இறந்து கிடந்தன. ஆனால் பறவைக் காய்ச்சல் இன்னும் மகாராஷ்டிராவை எட்டவில்லை என்று மாநில வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவில் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அறியப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் புதன்கிழமை 16 பறவைகள் இறந்து கிடந்தன. கோகனிபாடா பகுதியில் உள்ள விஜய் கார்டன் சொசைட்டி, கவேசர் மற்றும் ஹில் கார்டன் ஆகிய இடங்களில் இருந்து இந்த பறவை இறப்பு பதிவாகியுள்ளது.
உள்ளூர்வாசிகள் உடனடியாக பறவை இறப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தானேவின் துணை நகராட்சி ஆணையர் சந்தீப் மால்வி கருத்துப்படி, “பறவை இறப்புக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. சடலங்கள் விசாரணைக்காக புனேவில் உள்ள நோய் விசாரணை முகமைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கைக்குப் பிறகுதான் இந்த விவகாரத்தில் நாங்கள் எதையும் கூற முடியும்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பறவைக் காய்ச்சல் இன்னும் மகாராஷ்டிராவை எட்டவில்லை என்று வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "இதுவரை, மகாராஷ்டிராவின் எந்தப் பகுதியிலிருந்தும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை" என்று வனத்தின் முதன்மை தலைமை பாதுகாவலர் நிதின் ககோட்கர் கூறினார். பறவை காய்ச்சல் பாதிப்பால் ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
இந்த சூழலில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை வனத்துறை வார்டன்களுக்கு ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா குறித்த பொதுவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.