காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்திபெற்ற அமர்நாத் குகை அருகே நேற்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கோர நிகழ்வின் சில முக்கியத் தகவல்களை அறிவோம்:
* அமர்நாத் குகை அருகே நேற்று மாலை 5:30 மணியளவில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சமயத்தில் நிலச்சரிவும் உண்டாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் புனித யாத்திரை சென்ற 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவரையில் 15,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
* அமர்நாத் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் வரை 2 நாள்களாகப் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் வானிலை சீரானதைத் தொடர்ந்து புனித யாத்திரை நேற்று தொடங்கியிருந்த நிலையில், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. தற்போது மீண்டும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* நேற்று சுமார் 15,000 பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து வந்ததாக யாத்ரீகர் ஒருவர் கூறியுள்ளார்.
* காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் இரவு முழுவதும் ஈடுபட்டனர். இன்று காலை அவர்கள் மீண்டும் மீட்பு பணியை தொடர்ந்து உள்ளனர். 75 மீட்புப் பணியாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் இதில் ஈடுபட்டனர்.
* வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அமர்நாத் குகைக் கோயிலில் இருந்த பக்தர்கள் பஞ்சதர்னி பகுதிக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
* இந்திய ராணுவத்தின் மீட்புக்குழுவால் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது. காயமடைந்த பலர் பால்டலில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, அமர்நாத் பகுதியில் நேற்று மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை 31 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பக்தர்களின் கூடாரங்கள் பல அடித்துச் சென்றுவிட்டது. மழை இன்னும் தொடர்கிறது என்றும் எனினும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* அமர்நாத் மேகவெடிப்பு குறித்து அறிய நான்கு ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* அமர்நாத் மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கியது. இந்த புனித யாத்திரை ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது.
மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது?
பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் ஏற்படும் இயற்கை நிகழ்வாக மேகவெடிப்பு பார்க்கப்படுகிறது. சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது. பருவமழைக் காலங்களில், கனமான தண்ணீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்து விடாத வண்ணம் தடுக்கும். கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பும்.
இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரேநேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடும். இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும். இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்பொழுது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன.
இந்திய வானிலையை பொருத்தவரை இத்தகைய வெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் நிகழ்ந்துள்ளன. இத்தகைய மேக வெடிப்புகள் எப்போது எங்கு நிகழும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய மேகவெடிப்பே காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிக்கலாமே: மேம்பாலத்தின்கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளிப்பேருந்து! மாணவர்களை மக்கள் மீட்ட வீடியோ!