பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க 15 மாநிலங்கள் தவறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 16 மாநிலங்கள் இணைந்துள்ளன. இத்திட்டத்தின் மூலம் 1023 விரைவு நீதிமன்றமங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இவற்றில் நிலுவையிலுள்ள 1,66,882 பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நாட்டில் நிலுவையிலுள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும் இதுவரை 15 மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்த தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இந்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
இந்த மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகம் 5 முறை சுற்றறிக்கை அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தின்படி அமைக்கப்படும் இந்த விரைவு நீதிமன்றங்கள் ஓராண்டு வரை இயங்கும். அதன்பின்னர் இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு இதன் கால அளவு நீட்டிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.