கடந்த மார்ச் 19-ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவலின் காரணமாகத் சாத்தப்பட்ட திருப்பதி கோயிலின் நடை, ஜூன் 5-ஆம் தேதி திறக்கப்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து 10 நாட்கள் பணி செய்து விட்டு, மீண்டும் 10 நாட்கள் விடுப்பிலிருந்து, மறுபடியும் பணிக்குத் திரும்பும்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே இணையதள வாயிலாகச் சீட்டுகள் விற்கப்பட்டு, தினமும் 12,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர், 4 வாத்தியக்காரர்கள், 5 பாதுகாவலர்கள் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பொது தரிசனத்தை நிறுத்த கோயிலின் பிரதான அர்ச்சகர் ரமண தீட்ஷிதர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அர்ச்சகர்களின் பாதுகாப்பு கருதி சில வாரங்களுக்கு பொது தரிசனத்தை நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஏழுமலையானுக்கான சேவைகளை நிறுத்த முடியாது. அது மனித குலத்திற்கு நல்லதல்ல. வழக்கமான நடைமுறையில் ஏழுமலையானுக்கு சேவைகள் தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, அர்ச்சகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டிக்கும் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொது தரிசனத்தை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.