பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.14 லட்சம் நாணயங்களை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவித்து வருகிறது ஷீர்டி சாய்பாபா கோயில் நிர்வாகம்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷீர்டி சாய்பாபா கோயில் புகழ்பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அதிக பணம் குவிக்கும் கோயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்கள், வாரத்துக்கு ரூ.14 லட்சத்தை தாண்டுகிறது. இந்த நாணயங்களை வாங்க வங்கிகள், மறுத்துவருகின்றன. நாணயங்களை வைப்பதற்கு இடம் இல்லை என்பதை காரணமாகக் கூறுகின்றன. இதனால் இந்த நாணயங்க ளை என்ன செய்யலாம் என ஷீர்டி சாய்பாபா கோயில் நிர்வாகம் தவித்து வருகிறது.
ஷீர்டி கோயில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் முக்லிகர் கூறும்போது, ‘’வாரத்துக்கு இரண்டு முறை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை எண்ணுகிறோம். ரூ.2 கோடிவரை கிடைக்கிறது. அதில், ஒவ்வொரு முறையும் சுமார் ரூ.7 லட்சம் வரை நாணயங்கள் கிடைக்கின்றன. இந்த நாணயங்களை வங்கிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன’’ என்றார்.
ஷீர்டி சாய்பாபா கோயிலின் அறக்கட்டளைக்கு ஏழு வங்கிகளில் கணக்கு உள்ளன. அந்த வங்கிகள் அனைத்தும் நாணயங்களைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டன. இதனால், ‘இதுக்கு ஒரு தீர்வை சொல்லுங்க’ என்று ரிசர்வ் வங்கிக்கு கோயில் அறக்கட்டளை கோரிக்கை வைத்துள் ளது.